பல்லடம்:பல்லடத்தில் தாலுகா அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகத்துக்கு, பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால், அங்குள்ள இ-சேவை மையம் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.
எனவே, பொதுமக்கள் பலர் கூட்டுறவு சொசைட்டிகளில் உள்ள இ-சேவை மையங்களை நாடுகின்றனர். பல்லடம் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள இ-சேவை மையம், கடந்த சில தினங்களாக பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் இ-சேவை மையங்களை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால், சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து பல்லடம் கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இ-சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்று ஊழியர் இல்லாத காரணத்தினால், சேவை மையம் பூட்டப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் திறக்கப்படும்,' என்றனர்.