கோவை மாவட்டம், செட்டிபாளையத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மகாதேவன், 40, மகள் தன்யா, 18. இவரும், சுந்தராபுரம் காந்திபுரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 21, என்பவரும் மூன்றாண்டுகளாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதலனுடன் தன்யா போனில் பேசி வந்தார். இந்நிலையில், மகள் காதலிப்பதால், மனதுக்குள் வெறுப்பில் இருந்த மகாதேவன், சில நாட்களாக மகள் காதலனுடன் பேச போன் தர மறுத்தார்.
ஜூன் 5ம் தேதி தன்யா பிறந்தநாளை கொண்டாட பிரசாந்த், நண்பர்கள் நால்வருடன் மது போதையில் நள்ளிரவு, 12:15 மணிக்கு, ஒரே பைக்கில் தன்யா வீட்டிற்கு வந்தனர். கேட் பூட்டப்பட்டிருந்தது. நண்பர்கள் நால்வரும் சுவர் ஏறி குதித்து, உள்பக்கம் தாழிடப்பட்ட கதவை தட்டினர். அப்போது, மகாதேவன், தன்யாவின் மாமா விக்னேஷ், 29, ஆகியோர் கதவை திறந்து வெளியே வந்தனர். அவர்களிடம், தன்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வந்ததாக தெரிவித்து நால்வரும் கூச்சலிட்டனர். மேலும், தன்யாவை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி வாக்குவாதம் செய்தனர்.
ஆத்திரமடைந்த தன்யாவின் மாமா விக்னேஷ், பிரசாந்த்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். செட்டிபாளையம் போலீசார், விக்னேஷை கைது செய்தனர். மகாதேவனிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், ஆணவக்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. காதலன் கொலையுண்டதால் வேதனையடைந்த தன்யா, நேற்று குளிர்பானத்தில் சாணிப்பவுடரை கலந்து குடித்தார். அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
'சில்மிஷ' இன்ஸ்., மாற்றம்
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கிரிஜா, 27, திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் தங்கி, தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றுகிறார். ஒரு புகார் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவரிடம், அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சுகுமார், 45, கிரிஜாவின் மொபைல் எண்ணை வாங்கியுள்ளார்.
இரவில் தொடர்ந்து, கிரிஜாவுக்கு போன் செய்தும், அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு ஆபாச படங்கள் அனுப்பியும், 'வீடியோ கால்' செய்தும் பாலியல் தொல்லை கொடுத்தார். போலீசார் புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால், நேற்று முன்தினம், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஆதாரங்கள், படங்களுடன் கிரிஜா மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சுகுமாரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறிய கிரிஜா, தன் தோழியுடன் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர் மீது கிரிஜா தான் ஆசைப்பட்டு, துரத்தி வந்தார் என, போலீசார் கூறுகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி தன் தாயுடன் வசிக்கிறார். சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை சிகிச்சைக்காக வீரம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு, தாய் அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் பரிசோதனையில், மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.
விசாரித்ததில், அப்பகுதியிலுள்ள, 51 வயது பெரியப்பா, தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக, தாயிடம் சிறுமி கூறினார். அவர் தாய் அளித்த புகார் படி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து சிறுமியின் பெரியப்பாவை தேடி வந்தனர். கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால், அவர் தற்கொலை செய்து கொண்டார். அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காதலை தாய் கண்டித்ததால் 2 சகோதரிகள் தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை - அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, வித்யா, 21, காயத்ரி, 20, என, மூன்று மகள்கள் இருந்தனர். இதில், வித்யாவும், காயத்ரியும், காங்கேயத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நேற்று முன்தினம் அயன்புதுப்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது. இதற்காக சகோதரிகள் இருவரும், சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தனர்.
அவர்கள் வீட்டில் இருக்கும் போது, தொடர்ந்து மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த அவர்களது தாய் கேட்டபோது, இருவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் சகோதரர்களை காதலிப்பதாக தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த அவர், இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டித்தார்.
![]()
|
இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வித்யாவும், காயத்ரியும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதே பகுதி பெரியவேட்டை என்பவரது கிணற்றில், இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து வளநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தையை கொன்ற தாய்; போதை கணவரால் விபரீதம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, தளி தீபாலபட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார், 29. அவரது மனைவி வசந்தி, 27. இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்திருந்த தம்பதியர் இரு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று மாலை குழந்தையை வீட்டிலுள்ள ஆறு அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து வசந்தி கொலை செய்தார். தளி போலீசார் வழக்கு பதிவு செய்து, வசந்தியை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: தேங்காய் லோடு ஏற்றும் வேலை செய்து வரும் சசிக்குமார் தினமும் மது அருந்தி வந்து, மனைவியிடம் தகராறு செய்ததோடு, குடும்ப செலவுகளுக்கும் பணம் தராமல் இருந்துள்ளார். தனக்கே, உணவு மற்றும் வாழ வழியில்லாத நிலையில், பெண் குழந்தை வளர்ந்து கஷ்டப்பட வேண்டுமா என மனமுடைந்து, கொலை செய்து விட்டதாக வசந்தி தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறுமியருக்கு சாக்லேட் கொடுத்து சீரழித்த பள்ளி முதல்வர் 'சஸ்பெண்ட்'
ராஜஸ்தானில், துங்கர்புர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் முதல்வராக இருந்தவர், ரமேஷ் சந்திர கட்டாரா. இவர் மீது, பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர், சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், பள்ளி முதல்வர் ரமேஷ் சந்திர கட்டாராவை கைது செய்தனர். இதையடுத்து, அவரை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதுகுறித்து, துங்காபர் காவல் கண்காணிப்பாளர் குந்தன் கவாரியா கூறியதாவது: கோடை விடுமுறையின் போது, 9 - 12 வயது வரை உள்ள மாணவியரை, சிறப்பு பயிற்சிக்காக பள்ளிக்கு வரும்படி, ரமேஷ் சந்திர கட்டாரா கூறி உள்ளார். இதன்படி, பள்ளிக்கு வந்த சிறுமியரை, புதிதாக கட்டியுள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பின், சிறுமியருக்கு சிப்ஸ், சாக்லேட் வாங்கி தந்துள்ளார். இப்படி ஆறுக்கும் மேற்பட்ட சிறுமியரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ரமேஷ் சந்திர கட்டாராவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல்: 6 பேர் கும்பல் கைது
நாடு முழுதும், 'டார்க் நெட்' எனப்படும், சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் இணையதளத்தை பயன்படுத்தி, 'கிரிப்டோகரன்சி' வாயிலாக போதைப் பொருட்களை விற்ற ஆறு பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அவர்களிடம் இருந்து, 10.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.