இம்பால், மணிப்பூரில் பல இடங்களில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஆயுதம் தாங்கிய வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
![]()
|
பேரணி
இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள், சமீபத்தில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரத்தை கட்டுப்படுத்த, துணை ராணுவப் படை, ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுஉள்ளனர்.
கடந்த சில நாட்களாக வன்முறை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
செரயு என்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள், நேற்று முன் தினம் இரவு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ரஞ்சித் யாதவ் என்ற வீரர் உயிரிழந்தார்.
மேலும் இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த செரயு பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில், ஆள் இல்லா உளவு விமானங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.