வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பீஹாரில், கடந்த 14 மாதங்களில் இருமுறை இடிந்து விழுந்த கங்கை நதி பாலத்தை கட்டி வந்த நிறுவனத்துக்கு மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அந்த நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அலட்சியம்
பீஹாரில், பாகல்பூர் மாவட்டத்தின் சுல்தான்கஞ்ச் என்ற இடத்தில் இருந்து, காகாரியா மாவட்டத்தின் அகுவானி காட் என்ற இடத்தை சாலை மார்க்கமாக இணைக்க, கங்கை நதி மீது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம், 1,710 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம், கடந்த ஆண்டு ஏப்., மாதம் இடிந்து விழுந்தது.
மீண்டும் பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், பாலத்தை கட்டி வந்த ஹரியானாவைச் சேர்ந்த 'எஸ்.பி., சிங்லா கன்ஸ்ட்ரக் ஷன்' என்ற நிறுவனத்துக்கு பீஹார் அரசு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
அதில், 'விபத்துக்கு காரணமான உங்கள் நிறுவனம், 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால், அரசு ஒப்பந்த பணிகள் வழங்குவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு, கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, கட்டுமான நிறுவனத்தின் முறைகேடுகளை கண்காணிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக, சாலை கட்டுமானத்துறை செயற் பொறியாளரை 'சஸ்பெண்ட்' செய்து, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
![]()
|
பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமாக, பீஹாரின் சாலை கட்டுமானத் துறையில் சிலர் கூறியதாவது: இந்த பாலத்தை தாங்கும் துாண்களை அமைப்பதற்காக, 150 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் 150 அடி ஆழம் என்பது பிரச்னையல்ல. ஆனால், நதியின் நடுப்பகுதியில் வெள்ள ஓட்டம் அதிகமாக இருக்கும்.
அந்தப் பகுதிகளில் 200 அடிக்கும் அதிகமாக ஆழம் இருக்க வேண்டும். நதியின் நடுப் பகுதியில் மட்டும் 22 துாண்கள் உள்ளன. ஆனால், அங்கும் 150 அடியில் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் கடந்த 14 மாதங்களில் இருமுறை பாலம் இடிந்து விழுந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஹரியானாவைச் சேர்ந்த எம்.பி., சிங்லா கன்ஸ்ட்ரக் ஷன் என்ற இந்நிறுவனம், 1996 முதல் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறது.
ஒப்பந்த பணி
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஜம்மு - காஷ்மீர் திட்ட கட்டுமான கழகம், எல்லை சாலைகள் அமைப்பு, டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பணிகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்நிறுவனம் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.