வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஈ.மதுசூதனன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம் - கர்நாடகா இடையேயான மேகதாது அணை விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடகா துணை முதல்வர், சிவகுமார் கூறியிருப்பது, இரு மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை சிதைப்பதாக உள்ளது.
எனவே, சிவகுமாரின் அறிவிப்புக்கு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறிய விஷயம் தான், கேலிக்கூத்தாக உள்ளது... அதாவது, 'மேகதாது அணை விவகாரத்தில், தமிழக நலனுக்கு இடையூறு ஏற்பட்டால், உலக நீதிமன்றத்திற்கும் செல்லத் தயார்' என, அறிவித்துள்ளார்.
'கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்பதால், பிரச்னையை ராகுலிடம் கூறி, சமாதானம் செய்தாலே போதும்... எதற்கு உலக நீதிமன்றம் செல்ல வேண்டும்...' என, 'நெட்டிசன்'கள் கேள்வி எழுப்பி, அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, 'காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும்' என, அம்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த விபரம் தெரிந்தும், அதுபற்றி அப்போது வாய் திறக்காத தமிழக காங்., நிர்வாகிகள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடகா சென்று, காங்.,கிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.

கர்நாடகா காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன என்பதை அறியாமலா பிரசாரம் செய்தனர்? இப்போது புலம்பும், தி.மு.க.,வும், அழகிரியும், அப்போது தங்களின் எதிர்ப்பை தெரிவிக்காதது ஏன்? பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் மவுனமாக இருந்து விட்டு, தற்போது கூக்குரலிடுவது, தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., அரசின் பதவியேற்பு விழாவில், தமிழக காங்., தலைவர்கள் பலரும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்று பெருமை அடைந்தனர்; மோடிக்கு எதிராக அணி திரண்டு விட்டதாகவும் மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில், மேகதாது அணை குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தமிழக முதல்வரை மூக்கறுத்து விட்டார், கர்நாடகா துணை முதல்வர்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல் வழியாக, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாது அணை பிரச்னையை கைவிடச் செய்வாரா ஸ்டாலின்? அதற்கு ராகுல் சம்மதிக்கவில்லை எனில், 'காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை' என, அறிவிக்கும் துணிச்சல் இருக்கிறதா? இனியும் மக்களை ஏமாற்ற கபட நாடகம் போடுவதை விடுத்து, இதைச் செய்யுங்களேன் ஸ்டாலின்... பார்க்கலாம் உங்களின் சாமர்த்தியத்தை!