மதுரை : தமிழகத்தில் பழங்குடியினர் நலத்திட்டங்களை செயல்படுத்தும் பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடக்கப்பட்டிருப்பதும், பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.265 கோடி பிற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இருந்து 2018 முதல் பழங்குடியினர் நலத்திற்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை, இயக்குநரகம் உருவாக்கப்பட்டது. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு செயலர், இயக்குநர், எம்.எல்.ஏ.,க்கள், பழங்குடியினர் அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் என 20 பேர் கொண்ட நிபுணர் குழு 2018 பிப்.,ல் நியமிக்கப்பட்டது.
இந்த ஆன்றோர் மன்றம் 2 ஆண்டுகளாக செயல்படவில்லை.
மதுரை சமூகஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: இம்மன்றத்தின் பதவி காலம் 2021 பிப்.,1ல் முடிவுற்றது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் நடக்கவில்லை என தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனரகம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரிவித்துள்ளது.
ஆன்றோர் மன்றம் என்பது பழங்குடியின மக்கள் குறைகளான வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும். இம்மன்றம் செயல்படாமல் இருப்பதால் பல்வேறு வளர்ச்சி நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2018- - 19, 2019- - 20, 2020 - -21ல் மட்டும் ரூ.265 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசு விதிகளின்படி தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முழு அளவில் உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.