வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தேசிய தரவரிசை பட்டியலில் (என்.ஐ.ஆர்.எப்.,) 52ல் இருந்து 53 வது இடத்திற்கும், அனைத்து கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 88ல் இருந்து 94 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட இப்பட்டியலில் அண்ணா பல்கலை 14, பாரதியார் 21, அழகப்பா 30, பாரதிதாசன் 41 வது இடங்களை பெற்றுள்ளன. பழமை வாய்ந்த காமராஜ் பல்கலை சறுக்கியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையில் ஐந்து பிரிவுகளில் பல்கலை, கல்லுாரிகளின் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கற்றல் கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைகள், பட்டம் பெற்றவர்கள் (வெளி மாநிலம், நாடுகள்) எண்ணிக்கை, பல்கலை ஆய்வுகளால் சமூக வளர்ச்சி, பல்கலை மீதான சக மாணவர், ஆசிரியர், வல்லுனர் பார்வை போன்ற பிரிவுகளில் ஆய்வு செய்யப்பட்டது.
இப்பிரிவுகளில் தலா 100க்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் கற்றல் கற்பித்தலுக்கு 63.47, பட்டம் பெற்றவர்கள் பிரிவில் 68.37, பல்கலை ஆய்வுகளால் சமூக வளர்ச்சி பிரிவில் 51.80 மதிப்பெண்களும் கிடைத்தன. அதே நேரம் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பிரிவில் 24.45, சக மாணவர் ஆசிரியர், வல்லுனர் பார்வை பிரிவில் 10.45 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. இரண்டு பிரிவுகளில் மதிப்பெண் குறைந்ததால் முந்தைய இடத்தை இப்பல்கலை தக்கவைக்க முடியவில்லை.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கற்பித்தல் குறைவு, விடுதிகளில் வசதியின்மை, மேற்படிப்புக்கு செல்வதில் குறைவு, புள்ளிவிபர பராமரிப்பில் தொய்வு, 2014 முதல் முன்னாள் மாணவர்கள் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்கம் போன்றவை காரணமாக அமைந்துவிட்டன. குறிப்பாக ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டிலாவது விட்ட இடத்தை பிடிக்க தற்போதைய துணைவேந்தர் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அடுத்தாண்டு சாதிப்போம்:
துணைவேந்தர் குமார் கூறுகையில், "இந்த முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு தேசிய அளவில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் சற்று பின்தங்கியுள்ளோம். அடுத்த ஆண்டில் சரி செய்து சாதிப்போம்" என்றார்.