விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் மேல்பாதி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு, அங்குள்ள ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பிரச்னை தொடர்கிறது.
இதனை தீர்ப்பதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்தது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கோட்டாட்சியர் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக விழுப்புரத்தில் கடந்த 2ம் தேதி நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க மறுத்து, மற்றொரு சமூகத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

இந்நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 145(1) ன் கீழ், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் வாாசலை பூட்டி சீல் வைத்தார். இதனால், அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேற்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேல்பாதி கிராமம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார், கோயிலை சுற்றி பேரிகார்டுகளை வைத்துள்ளனர். கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடியதுடன் வாகனங்களை திருப்பி விட்டுள்ளனர். மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கோயில் பிரச்னை தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு, இரு சமுதாயத்தினருக்கும் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.