புதுடில்லி: பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் அவரது இல்லத்தில், பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி, சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். முடிவுக்கு வருமா போராட்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனையர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷண் வீட்டுப் பணியாளர்களிடம் நேற்று(ஜூன் 06) போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரச்னைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: எங்கள் ஆதரவாளர்கள் மற்றும் மூத்த வீரர், வீராங்கனைகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். அனைவரும் சம்மதம் தெரிவித்தால் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். அரசு சொல்வதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்வது நடக்காது. இதுவரை எங்களது சந்திப்புக்கு அரசு நேரம் ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சந்திப்பு
தொடர்ந்து, மத்திய அரசு கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் அவரது இல்லத்தில், பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி, சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
அப்போது, பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. முடிவுக்கு வருமா போராட்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.