வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில், காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தனிக்கட்சி துவக்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சச்சின் பைலட்டின் தந்தையும், காங்., மூத்த தலைவருமான ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் வரும் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், அவர் புதிய கட்சி குறித்து அறிவிப்புகளை வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் மேலிடத்திற்கு விதித்த நிபந்தனைகளுக்கு என்ன பதில் வரும் என காத்துக் கொண்டு உள்ளார். ஜூன் 11 அன்று பெரிய பேரணிகளுக்கு வாய்ப்பு இல்லை. தவுசா என்ற இடத்தில், ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், காங்கிரசை விட்டு வெளியேறும் எண்ணம் சச்சின் பைலட்டிற்கு இல்லை என அவரது ஆதரவு அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். அவரது கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கும் போது சரியான செய்தி மக்களை சென்றடையும் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு முதல், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் நீடித்து வருகிறது. ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் சமரசம் செய்ததால், சச்சின் பைலட் அமைதியாக இருந்து வந்தார். ஆனால், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீதான ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க, டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரிடமும் தனித்தனியாக ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது. அப்போது, இருவரும் சமரசம் அடைந்ததாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தாலும், அவர்களுக்கு இடையேயான பிரச்னை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகின.