வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து மேடையிலேயே டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.
புதுடில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மதுபான கொள்கை குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் அரசியல் தலைவர் பலர் இதில் ஆதாயம் அடைந்து இருப்பதாகவும் துணை நிலை கவர்னர் தெரிவித்தார்.
மேலும் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் கவர்னர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வகையில் புதுடில்லி துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்த மணீஷ் சிசோடியா உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவருக்கு இதுவரையில் ஜாமின் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கல்வி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் கல்வி அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியா பற்றியும், கல்வித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை பற்றியும் நினைவுக்கூர்ந்து பேசினார்.
அப்போது, உணர்ச்சிவசப்பட்ட கெஜ்ரிவால், மேடையிலேயே கண்ணீர் வடித்தார். இதனையடுத்து கூட்டத்தினர் அவரை ஆறுதல்படுத்தும் வகையில் கோஷமிட்டனர்.