வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கர்நாடகா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இது குறித்து, சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜ., தோல்வி அடைந்தது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இதே போல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலும், மஹாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலிலும் பாஜ., தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர். மக்களின் இந்த மனநிலை தொடர்ந்தால், வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டில் ஒரு நல்ல மாற்றம் இருக்கும். இதைச் சொல்ல எந்த ஜோதிடரும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் தெருக்களில் திரண்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இது குறித்து சரத்பவார் கூறுகையில், ஆளும் கட்சியினரும், மக்களும் வீதிக்கு வந்து இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தினால் அது நல்லது அல்ல. இதுபோன்ற செயல்களை ஆளும் கட்சியினர் ஊக்குவிக்கின்றனர். இதனுடன், மாநிலத்தில் விவசாயம் தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. பருத்தி பயிரிடும் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.