சென்னை: ஆவினில் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வேலை செய்யவில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்தார்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் சிறார்கள் வேலை செய்வதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
14 வயதுக்கு உட்பட்டவர்களை எந்த நிறுவனமும், எந்தச் சூழ்நிலையிலும் பணியமர்த்தக் கூடாது. 14 முதல் 18 வயது வரை உள்ள பதின் பருவத்தினர் பணியமர்த்தப்படலாம். ஆனால், தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலையில் பணியமர்த்தக் கூடாது. சிறார்கள் யாரும் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை. ஆவினில் சிறார்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட தவறான செய்தி.
இது அவமதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த நிறுவனத்தின் பெயருக்குக் கலங்கம் விளைவிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட ஒரு செயல். 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் இங்கு வேலை செய்கிறார்கள் என்பதற்கான எந்தவித ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
ஒருவேளை அப்படி இருந்தால் எத்தகைய கடுமையான நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயாராகயிருக்கிறோம். கடந்த காலத்தில் எது இருந்தாலும் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், இப்போது யாரும் இல்லை. மேலும், சிறார்கள் யாரும் இங்கு வேலை செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.