வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: டில்லி மாநில அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தினை எதிர்க்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டில்லி மாநில அரசு அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றும் மற்றும் நிறைவேற்றும் அதிகாரம் டில்லி மாநில அரசுக்கு உள்ளது என கூறியது. இதனை எதிர்த்து மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை இயற்றியது.
இதற்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி எம்.பிக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். டில்லி அரசுக்கு ஆதரவு கோரி பாஜ., ஆளாத அனைத்து மாநில முதல்வரையும் சந்தித்து பேச கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டில்லி முதல்வர், பஞ்சாப் முதல்வர் மற்றும் ஆம்ஆத்மி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து, உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில், இன்று(ஜூன் 07) கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர்.

பின்னர், அகிலேஷ் யாதவ் மற்றும் கெஜ்ரிவால் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. டில்லி அரசுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்கும். பாஜ., அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்தால், இந்த அவசரச் சட்டம் ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்படலாம், 2024ல் பாஜ. அரசு ஆட்சிக்கு வராது. இவ்வாறு அவர் கூறினார்.