நடப்பு ஆண்டு 1.1 கோடி மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பல்லடம் அருகே, காவிரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த செம்மிபாளையம் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. காவிரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணைத் தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார்.
தற்போது நடவு காலம் என்பதால், மரக்கன்று நடும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும், 36 மாவட்டங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த மரக்கன்றுகள் நடும் விழாக்கள் மூலம், 1.6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சத்குருவால், கடந்த, 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட காவிரி கூக்குரல் இயக்கத்தின் மூலம், 4.4 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு, 1.1 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஈஷா தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக செம்மிபாளையத்தை சேர்ந்த விவேக் என்பவரின் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், மகிழம், தேக்கு, செம்மரம், வேங்கை, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.