பேருந்து நிழற்குடையில் மதுபாட்டில்கள்
திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், வேலஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் வசதிக்காக ஒன்றிய நிர்வாகம் சார்பில், பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிழற்குடையை உரிய முறையில் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அதை சில சமூக விரோதிகள், மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும், மது பாட்டில்கள், டம்ளர் மற்றும் தண்ணீர் கேன்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், இங்கு வருவதற்கு பயணியர் முகம் சுளிக்கின்றனர்.
எனவே, இந்த பேருந்து நிழற்குடைக்கு இரவு மற்றும் பகல் நேரத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- --எஸ்.பழனி, வேலஞ்சேரி.
சுடுகாடிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
திருத்தணி ஒன்றியம், தாடூர் காலனியைச் சேர்ந்த மக்களுக்கு, அதே பகுதியில் ஒன்றிய தார்ச்சாலையோரம் சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாடில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுச்சுவர் அமைத்து தரவில்லை.
இதனால், ஒன்றிய தார்ச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுடுகாடை அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
எனவே, சுடுகாட்டிற்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைத்து, போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.ஏழுமலை, தாடூர் காலனி, திருத்தணி.