மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது, நரசமங்கலம் கிராமம். இங்கு கடந்த சில நாட்களாக இரவு - பகலாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரம் கழித்து மின்சாரம் வருவதும், பின் போவதுமாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் துாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், போனை எடுப்பதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து மப்பேடு போலீசார் மற்றும் பேரம்பாக்கம் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து, மின் தடை பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததின் பேரில், மறியல் கைவிடப்பட்டது. இதனால், அங்கு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.