பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியம், மெதுார் ஊராட்சியில், 2019ல் தாய் திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.தற்போது, இந்த பூங்கா வளாகம் முழுதும் புற்கள், முட்செடிகள் சூழ்ந்து கிடக்கிறது.
விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து கிடக்கின்றன.பூங்காவின் சுற்றுச்சுவர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கிரில்கள் மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உபகரணங்களும் மாயமாகி உள்ளன.
இதையடுத்து, பாழடைந்து வீணாகி வரும் பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த பூங்கா மற்றும் உடற் பயிற்சி கூடம், தங்கும் விடுதியாக மாறி உள்ளது.
மெதுார் கிராமத்தில், நெல் நடவு பணிகளுக்காக, வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள கூலித்தொழிலாளிகள் இங்கு தங்கி உள்ளனர்.அவர்களது உடைமைகள் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் துணி உலர்த்துவதற்கு பயன்பட்டு வருகிறது.
கிராமப்புற சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்களுக்கு பயன்படும் வகையில், 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், அது தற்போது தங்கும் விடுதியாக மாறி உள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.