மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கடைகள், 3 அரசு பள்ளிகள் உள்ளன.
சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இங்கு தினமும் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் இங்கு தங்கி, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சாலைகளில் ஏற்படும் விபத்து வாகனங்களை கண்டுபிடிக்க, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், முக்கிய சாலைகள், சந்திப்புகள் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதில், சிங்கபெருமாள் கோவில்- - அனுமந்தபுரம் சாலையில், கொல்லை மேட்டுத் தெரு பகுதியில், சாலையின் இரண்டு பக்கமும் வைக்கப்பட்டு இருந்த கேமராக்கள் உடைக்கப்பட்டு, மாயமாகி, இரும்பு கம்பம் மட்டுமே உள்ளது.
அதில், தற்போது ஆளுங்கட்சி விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி, மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே, உடைந்த 'சிசிடிவி' கேமராவுக்கு பதிலாக, புதிய 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.