பந்தலூர்: தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ளது கேரளா மாநிலம் வயநாடு முத்தங்கா வனவிலங்கு சரணாலயம். இங்கு நேற்று முன்தினம் பகல் சாலையில் வாகனத்தை நிறுத்திய தமிழக சுற்றுலா பயணிகளில் ஒரு நபர் வனத்தினுள் சென்று இயற்கை உபாதை கழிக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒற்றை யானை சுற்றுலா பயணியை துரத்தியுள்ளது. இவரை தாக்கும் தூரத்தில் யானை வந்த நிலையில், வாகனத்தில் இருந்தவர்களும், அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகளும் சத்தம் போட்டு அவரை காப்பாற்றியுள்ளனர். வனத்துறையினர் அறிவுரை வழங்கி,, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். யானையிடமிருந்து சுற்றுலா பயணி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.