சென்னை: ‛‛ அடுத்தாண்டு நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தல், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
![]()
|
சென்னை, புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் நுாற்றாண்டு விழா, இன்று நடைபெற்றது. இதில், ‛அப்பா என அழைக்கட்டுமா தலைவரே' என்ற, புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அடுத்தாண்டு ஜூன்.,3 வரை கருணாநிதி, பிறந்தநாள் விழாவை கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி ஏழை, எளிய மக்கள் பயன்படும் ஆட்சியாக தான் இருக்கும். 95 ஆண்டுகள் வாழ்ந்த கருணாநிதி மேலும், 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இந்த விழாவின், நாயகனாக இருந்திருப்பார்.
கருணாநிதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தோழமை கட்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ; ஒரு மாநில கட்சியின் தலைவர் என்ற, எல்லைகளை கடந்தவர் கருணாநிதி. நிகழ்கால செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளை தீர்மானித்தவர்.
ஆக.,7ம் தேதி, மெரினாவில் உள்ள நினைவகம் திறக்கப்பட உள்ளது. ஜனநாயக போர்க்களமான நாடாளுமன்ற தேர்தல் நமக்காக காத்திருக்கிறது. யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை, தீர்மானிப்பதை விட, யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதை, தீர்மானிப்பதற்கான தேர்தலாக, 2024 பார்லி., தேர்தல் இருக்கும். இந்த தேர்தல் நாட்டிற்கானது, நமக்கானது அல்ல.
![]()
|
வரும், 23ம் தேதி நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவுக்கு, பீஹார் நிதிஷ் குமார் என்னை அழைத்துள்ளார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக, அனைவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.
தமிழக கவர்னர் செய்யும், சித்துவிளையாட்டுகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். எல்லோருக்கு எல்லாம் கிடைத்து விடக்கூடாது என நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்க்கிறார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மற்றும் தி.மு.க., பொதுச்செயலாளர் துரை முருகன் ஆகியோர் பேசினர்.