சென்னை : கோவில் அறங்காவலர்களாக, அரசியல்வாதிகளை நியமிப்பதை நிறுத்தும்படியும், கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கும்படியும், அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே, கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றம், அரசியல் ஆதிக்கம் காரணமாக, ஒரே நபரே பல ஆண்டுகளாக அறங்காவலர்களாக நீடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கோவில்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு குறித்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, 2021 ஜூன் 7ல், 75 உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்தது.
மனுக்கள் தாக்கல்
இந்த உத்தரவுகளில், 32ல் மாற்றம் மற்றும் விளக்கம் கோரி, மறுஆய்வு மனுக்களை, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை தாக்கல் செய்தன. பின், ஏழு உத்தரவுகளில் மட்டும் மாற்றம் கோரியும், மற்ற உத்தரவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வரலாற்று தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், நினைவு சின்னங்கள், கட்டுமானங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரி செய்து பராமரிக்க, 17 உறுப்பினர்கள் அடங்கிய புராதன ஆணையத்தை ஏற்படுத்தவும், அதன் ஒப்புதல் இன்றி, தொல்லியல் சின்னங்களில், எந்த மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த, 17 உறுப்பினர்கள் ஆணையம், மாநில சட்டப்படி இல்லை என்றும், தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோவில்கள் இடம் பெறவில்லை என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது. கலாசாரம், பாரம்பரியம், மத உரிமைகள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் பொறுப்பு, அரசுக்கு உள்ளது. வழக்கு விசாரணையின் போது, 17 உறுப்பினர்கள் அடங்கிய ஆணையத்துக்கு, அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. பண்பாட்டுத் துறை செயலர், ஏற்கனவே, ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.
எனவே, தற்போது உள்ள, 16 உறுப்பினர்களுடன், அறநிலையத் துறையை சேர்ந்தவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளலாம். அதனால், மாநில அளவிலான குழுவை, மாநில புராதன ஆணையமாக மாற்றுவதை ஏற்க இயலாது.
'கோவில்களின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய, மாநில தணிக்கை துறையை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, அரசு தரப்பில்கோரப்பட்டது. மத்திய தணிக்கை அதிகாரி தணிக்கை மேற்கொள்வதால், மாநில அரசின் நிர்வாக உரிமை பறிபோய் விடாது.
அதிகாரம்
மாநில அரசு, தன் சொந்த தணிக்கை முறையை பின்பற்றலாம். மத்திய தணிக்கை துறை மேற்கொள்ளும் தணிக்கையானது, தற்போதுள்ள நடைமுறையோடு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய தணிக்கைக்கு உத்தரவிட, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
கோவில் சொத்துக்கள் உரிமை மாற்றம் தொடர்பாக, அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கோவில் நலனுக்கு பலனளிக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். சொத்துக்களை மாற்றுவதற்கு முன், அதை காப்பாற்றுவதற்கான அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.
அதன் பின்னும், தேவைப்படும் பட்சத்தில், சட்டத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி, சொத்து விற்பனை குறித்து முடிவெடுக்கலாம். பொது தேவை என்றால், கோவில் நிலங்கள் மீது கை வைப்பதற்கு முன், அரசு நிலத்தை முதலில் பயன்படுத்த வேண்டும்.
கோவில் ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச ஊதிய சட்டம் பொருந்தும். நீதிமன்ற உத்தரவு, ஹிந்து மத நிறுவன ஊழியர்கள் பணி நிபந்தனை விதிகளுக்கு முரணாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும், கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு, அரசுக்கு உள்ளது. எனவே, கோவில் ஊழியர்களை பொறுத்தவரை, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை, மாநில அரசு பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மறுக்க முடியாது. பொது நிதி, கோவிலில் உள்ள உபரி நிதி வாயிலாக, கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான வருவாயை உருவாக்கலாம்.
அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே, கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க முடியாது. பக்தர்கள் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்; அறங்காவலர்கள் தேர்வு வெளிப்படையாக இருக்க வேண்டும். அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை, அறங்காவலராக நியமிக்கப்படுபவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசியல் ஆதிக்கம்
அறங்காவலராக நியமிக்கப்படுவர், மத நம்பிக்கை உடையவராக, பக்தராக இருக்க வேண்டும். அதேநேரத்தில், அரசியல் தொடர்பு இருக்கிறது என்பதற்காக, அவரது நியமனம் செல்லாததாகி விடாது. அரசியல் ஆதிக்கம் காரணமாக, ஒரே நபரை பல ஆண்டுகளாக அறங்காவலராகவும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு பதவிகளில் நியமிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணையை மூன்று மாதங்களுக்கு சிறப்புநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.