தேனி மாவட்டம், போடி, பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த, 47 வயது பெண் கூலித்தொழிலாளிக்கு, 8, 6 வயதில் இருமகள்கள் உள்ளனர். கடந்த, 2019 ஜூலை, 29ல் அவர்களை வீட்டில் விட்டு, போடியில் உள்ள தாய் வீட்டிற்கு பெண் சென்றார்.
பின்னர், திரும்பிய போது மகள்களை காணவில்லை. தேடியபோது, இரு சிறுமியரும் அப்பகுதியில் உள்ள முதியவர் அய்யப்பன், 73, வீட்டில் அழுது கொண்டு நின்றனர்.விசாரித்ததில், அவர்களை அய்யப்பன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியது தெரிய வந்தது. தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் வழக்கை விசாரித்து, குற்றவாளி அய்யப்பனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
முன்விரோதத்தில் பெண் கொலை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கொட்டமடக்கி பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி முனீஸ்வரி. இவர் தம்பி சதீஷ்க்கும், மூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் 33, மனைவி சத்தியாவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது வெளியே தெரிந்ததால் 7 மாதத்திற்கு முன் சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இருவரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் கொட்டமடக்கிபட்டி காளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவுக்கு வந்த மணிமாறன், முனீஸ்வரி குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
ஆத்திரமடைந்த மணிமாறன் அரிவாளால் முனீஸ்வரியை மார்பிலும் முனீஸ்வரியின் கொழுந்தனாரான தென்காசி மாவட்டம் தேவர்குளம் சுரேைஷ 33, இடதுகையிலும் வெட்டினார். படுகாயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று காலை முனீஸ்வரி பலியானார். மணிமாறனை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பட்டதாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி
சேலம், தாதகாப்பட்டி, வேலு புதுத்தெருவை சேர்ந்த பட்டதாரி பிரபு, 31, பகுதி நேர வேலை தேடி வந்தார். அவரது மொபைல் போனுக்கு மே 23ல், ஆன்லைனில் பகுதி நேர வேலை விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிடப்பட்ட 'செயலி'யை பதிவிறக்கி, சுய விபரங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து வந்த தகவல்படி வேலைக்கு முன்பணம், 2 லட்சத்து, 1,959 ரூபாயை செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில், விளம்பரம் வந்த மொபைல் போன் எண் அணைத்து வைக்கப்பட்டது. பிரபு புகாரில், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
76 சவரன் திருட்டு
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய குடியிருப்பில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கு பலர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்பில் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் திருடி உள்ளனர். பாதிக்கப்பட்டோர், கருமலைக்கூடல் போலீசில் புகார் அளித்தனர்.
அனல் மின் நிலைய உதவி பொறியாளர் சந்திரகலா, 41, என்பவர் வீட்டில், 76 சவரன் தங்க நகைகள், 9 லட்சம் ரூபாய் திருடுபோனது. அதேபோல், கதிரேசன் என்பவர் வீட்டில், 2 சவரன், 5,000 ரூபாய் திருடுபோனதாக போலீசார் தெரிவித்தனர். திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தி.மு.க., கவுன்சிலர் மகள் கொலை
தர்மபுரி அடுத்த நரசிங்காபுரம் கோம்பை வனப்பகுதியில் நேற்று காலை, 6:45 மணியளவில் இளம்பெண் ஒருவர், வாயில் துணி வைத்து கட்டப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதியமான்கோட்டை போலீசார், பெண்ணின் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், கொலையானவர், பழைய தர்மபுரி, ரயில்வே லைனைச் சேர்ந்த, தர்மபுரி நகராட்சி, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா, 23, என, தெரிந்தது. அவருக்கு திருமணம் ஆகவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரை கடத்தி வந்து, கொலை செய்து, நரசிங்காபுரம் கோம்பை பகுதியில் உடலை வீசி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது காதல் பிரச்னையால் நடந்த கொலையா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணுக்கு 'கவனிப்பு'
சேலம், தாதகாப்பட்டி, சவுந்தர் நகரைச் சேர்ந்தவர் நசீர், 45; மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக இளநிலை உதவியாளர். இவரது தாய் மெஹருன்னிசா, 73. இவர், மேல் வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை, 11:00 மணிக்கு, 'பர்தா' அணிந்து வந்த பெண், குடிக்க தண்ணீர் கேட்டார். மெஹருன்னிசா எடுக்க சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற பெண், கத்தியால் மெஹருன்னிசா கழுத்தில் குத்தி, அவரது தோடு, சங்கிலியை பறித்தார்.
மூதாட்டி கூச்சலிட, அப்பகுதி மக்கள் திரண்டு, பெண்ணை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின், அன்னதானப்பட்டி போலீசாரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தர்மலிங்கம் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்த பாஷா மனைவி ஜன்மா, 32, என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கத்தியால் குத்தி, நகை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை கணவரை அடித்து கொன்ற மனைவி கைது
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 46; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி, 31. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. ரமேஷ் குடிப்பழக்கத்தால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 2-ம் தேதி அதிகாலை, முகத்தில் படுகாயங்களுடன் ரமேஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரித்தனர். குடும்ப தகராறில், மனவேதனையடைந்த ரமேஷ் கட்டையால் தன்னைத்தானே முகத்தில் தாக்கிக் கொண்டதாக, மகாலட்சுமி கூறினார். அவர் மீது போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், தீவிர விசாரணை நடந்தது. அப்போது, தகராறில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கட்டையால் ரமேஷை தாக்கிக் கொன்றது தெரியவந்தது. மகாலட்சுமியை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

ரூ. 56 லட்சம் மோசடி: ஊராட்சி தலைவர் கைது
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி மங்கலத்தை சேர்ந்தவரிடம், இந்தியாவில் புதிதாக துவங்கப்படும் ஜெர்மன் நிறுவனத்தில் நிர்வாக உறுப்பினர் பதவி பெற்று தருவதாக, பத்தனம்திட்டை மாவட்டம், நிரணம் ஊராட்சி தலைவர் புன்னுாஸ் கூறியுள்ளார். அதை நம்பி, கடந்த, 2019ம் ஆண்டு முதல் பல தவணைகளில், 56 லட்சம் ரூபாயை புகார்தாரர் கொடுத்துள்ளார். அதன்பின், உறுப்பினர் பதவி வாங்கி கொடுக்காததால், பண மோசடி செய்ததை அறிந்து, வடக்கஞ்சேரி போலீசில் அவர் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில், இந்த மோசடி மட்டுமின்றி, தனியார் மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கு அட்மிஷன் வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நிரணம் ஊராட்சி தலைவரும், அப்பகுதி காங்கிரஸ் தலைவருமான புன்னுாஸ், 80, நேற்று கைது செய்யப்பட்டார். ஆலத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பிரபல தாதாவின் கூட்டாளி கோர்ட்டில் சுட்டுக் கொலை
உத்தர பிரதேசத்தில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி, காங்., பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் கூட்டாளியான சஞ்சீவ் ஜீவா மீது, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 50கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், லக்னோவில் உள்ள கைசர்பாக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேற்று சஞ்சீவ் ஜீவா ஆஜரான போது, வழக்கறிஞர் வேடமணிந்து வந்த மர்ம நபர், அவரை துப்பாக்கியால் சுட்டார். படுகாயங்களுடன் போராடிய ஜீவா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவரும், 2 வயது குழந்தையும் காயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவரை துரத்திப் பிடித்த வழக்கறிஞர்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.