''பல கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்கா ஓய்...'' என, வந்ததுமே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருப்பா அவங்க...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர்ல, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு இருக்கு... இங்க அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட, தகுதி உள்ள பலர் குறைஞ்ச வாடகைக்கு பல வருஷமா குடியிருந்தா ஓய்...
''இதுல பலர், 'ரிட்டையர்' மற்றும் வேறு ஊர்களுக்கு மாறுதல்ல போயிட்டாலும், வீட்டை காலி செய்யாம, உள்வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுண்டு இருந்தா... இப்ப, பழைய கட்டடங்களை இடிச்சிட்டு, புதுசா கட்ட வாரியம் முடிவு செஞ்ச தால, வீட்டை காலி செய்ய 'நோட்டீஸ்' அனுப்பினா ஓய்...
''எல்லாருமே உடனே காலி பண்ணிட்டா... பிரச்னை என்னன்னா, இப்ப பணியில் இருக்கற அரசு ஊழியர்கள் தவிர, மத்தவாள்லாம் வாடகை கட்டியே பல வருஷம் ஆறது ஓய்...
''வாடகை பணமே பல கோடி ரூபாய் பாக்கி இருக்கு... அவாள்லாம் எங்க இருக்கா, எப்படி வசூல் பண்றதுன்னு தெரியாம, வாரிய அதிகாரிகள் முழிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.