திருவனந்தபுரம்,பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக, கேரளாவில் உள்ள 3,800க்கும் அதிகமான கோவில்களில் மரங்கள் வளர்த்து, குளங்களை பராமரிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு துவங்கியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக, கடவுளின் அழகிய பசுமை இல்லங்கள் என பொருள்படும், 'தேவாங்கனம் சாருஹரிதம்' என்ற திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.
![]()
|
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி, மாநில தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தை மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து திருவாங்கூர் தேவசம் வாரிய தலைவர் கே.அனந்தகோபன் கூறியதாவது:
கேரள கோவில்களை, ஐந்து தேவசம் வாரியங்கள் நிர்வகித்து வருகின்றன. இந்த வாரியங்களின் கட்டுப்பாட்டில் 3,800க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
'தேவாங்கனம் சாருஹரிதம்' திட்டத்தின் கீழ், கோவில் நிலங்களில் மரங்கள் வளர்த்து பசுமை வளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கோவில் வளாகங்களுக்குள் பூக்கள் மற்றும் பழங்கள் தரும் மரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு இன்றி இருக்கும் கோவில் குளங்களை கண்டறிந்து பட்டியல் அனுப்பும்படி, அனைத்து தேவசம் வாரிய உதவி கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கோவில் குளங்களை சீரமைத்து, நீர்நிலைகளாக பராமரிக்கவும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.