ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றிக்கு பிரியங்காவின் உழைப்பு முக்கிய பங்காற்றியதாக அக்கட்சியின் மாநில முதல்வர், எம்.பி.,க்கள் உள்ளிட்ட 25 மூத்த தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் பிரசார குழுவின் தலைவராக பிரியங்காவை நியமிக்க வலியுறுத்தி தலைமைக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், 40 இடங்களை பிடித்து காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் தொகுதிகள் 44ல் இருந்து 25 ஆக சரிந்தது.
இதற்கு பிரியங்காவின் பிரசாரமே காரணம் என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அவதுாறு வழக்கில் சிக்கி ராகுல் எம்.பி., பதவியை இழந்த நேரத்தில், கர்நாடகாவில் பிரியங்கா மேற்கொண்ட தீவிர பிரசாரமே, அம்மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வழிவகுத்ததாகவும், மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகாவில் காங்., நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தொண்டர்களின் மனதில் அவர் ஆழமாக விதைத்தாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த உ.பி., தேர்தலுக்கு பின், பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.
உ.பி., மற்றும் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது, 'மகிளா சம்வாத்' எனப்படும் மகளிர் அமைப்புகள் உருவாக்குவதை மையப்படுத்தியே பிரியங்காவின் பிரசாரம் அமைந்தது. இதையே வரவிருக்கும் தேர்தல்களிலும் பின்பற்ற காங்., முடிவெடுத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காண்பது பெண்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்துள்ளது.
எனவே, வரவிருக்கும் தேர்தல்களில், பெண்களுக்கு வருவாய் ஆதாரங்களை உருவாக்குதல், இலவச கேஸ் சிலிண்டர் மற்றும் பெண்களுக்கான இலவச பொது போக்குவரத்து திட்டங்களில் காங்., கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.
மேலும், தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் அளிக்க வேண்டும் என்பதை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை சொந்த கட்சி தலைவர்களே ஒப்புக் கொள்ளாத போதும் அந்த முடிவில் அவர் உறுதியாக உள்ளார்.
மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதால், வரவிருக்கும் தேர்தல்களில் அவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே காங்., மூத்த தலைவர்களின் விருப்பமாக உள்ளது.
இதன் பிரதிபலிப்பாகத் தான், தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பங்கேற்று பேசினார். ஜூன் 12ல் மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திலும் அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வருவாய் உத்தரவாதம் அளிக்கும் திட்டம் குறித்து அவர் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் பிரியங்கா முக்கியப் பங்காற்ற உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் பிரசாரக்குழு தலைவராக பிரியங்காவை நியமித்து அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது கட்சிக்கு ஏற்றத்தை அளிக்கும் என, அக்கட்சியை சேர்ந்த முதல்வர், எம்.பி.,க்கள் உட்பட 25 மூத்த தலைவர்கள் காங்., மேலிடத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.