காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி:
ரயில்வே பட்ஜெட்டை, 2017ல், மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தது, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசின் மிகப்பெரிய தவறு. ரயில்வேக்கு தனி பட்ஜெட் என்ற நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
டவுட் தனபாலு:
இப்ப என்ன சொல்ல வர்றீங்க... ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடாம விட்டதால தான், ஒடிசா ரயில் விபத்து நடந்துடுச்சா... இவரது கருத்து, அஜித் படம் ஒன்றில், 'கண்ணாடியை திருப்பினா, ஆட்டோ ஓடும்'னு சொல்ற, 'காமெடி' மாதிரி இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
தமிழக காங்., தலைவர் அழகிரி:
'முதல்வர் வெளிநாடுகளுக்கு செல்வதால், அன்னிய முதலீடு வராது' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்; இது, கண்டனத்துக்குரியது. கவர்னர் ஒரு சுவாரசியமான நபர். அவர், பேசுவது நகைச்சுவையாக தான் இருக்கும். அவர், ஏதாவது கருத்து தெரிவிக்காமல் இருந்தால், திரைப்படங்களில் வடிவேலுவை நீண்டநேரம் காணவில்லை என்பது போல நமக்கு தோன்றி விடும்.
![]()
|
டவுட் தனபாலு:
உங்க கூட்டணியின் தலைவரை, மறைமுகமா கவர்னர் கிண்டல் செஞ்சிருக்காரு... தி.மு.க.,வினர் குமுறிட்டு இருக்காங்க... அது, உங்களுக்கு, 'காமெடி'யா தெரியுதா... லோக்சபா தேர்தல்ல, 'சீட்' கேட்டு அறிவாலயம் போறப்ப, உங்களுக்கு, 'டிராஜெடி' காத்துட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி, கவர்னர் ரவி ஆலகால விஷத்தை கக்கி இருக்கிறார். கவர்னரின் பேச்சும், செயல்பாடுகளும் எல்லை மீறி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் முதல் விரோதியாக உள்ள கவர்னர் ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல், நாகாலாந்து மாநிலத்தில், அவரை மக்கள்விரட்டி அடித்தது போல தமிழகத்திலும் நடக்கும்.
டவுட் தனபாலு:
கவர்னரை, எந்தக் காலத்திலும் மக்கள் விரட்டி அடிச்சதா சரித்திரம் இல்லை... ஓட்டு கேட்டு போற அரசியல்வாதிகளை தான் துரத்தி அடிச்சிருக்காங்க... 30 வருஷத்துக்கு முன்னாடி உங்க கட்சியின் நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே, யாரை மக்கள் விரட்டி அடிச்சிருக்காங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுமே! என்பதில், 'டவுட்'டே இல்லை!