வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால் : துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஆம்புலன்ஸ்க்கு தீ வைக்கப்பட்டது. இதில் அந்த சிறுவன், அவனுடைய தாய் மற்றும் உறவினர் என, மூன்று பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், பெரும்பான்மையினரான மெய்டி மற்றும் பழங்குடியினரான கூகி சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. தற்போது மாநிலம் முழுதும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்க்சப் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாமில், கடந்த, 4ம் தேதி இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, அங்கு வசித்து வந்த தான்சிங் ஹாங்கிங், 8, என்ற சிறுவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தான்.
இதையடுத்து, அச்சிறுவனை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அசாம் ரைபிள்ஸ் படையினர் ஏற்பாடு செய்தனர். அச்சிறுவனின் தந்தை பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்; தாய் மீனா ஹாங்சிங், 45, மெய்டி சமூகத்தைச் சேர்ந்தவர். உறவினர் லிடியா லாம்ரெம்பம், 37, உடன் இருவரும் ஆம்புலன்சில் இம்பாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் வரை அசாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்புக்கு உடன் சென்றனர். அதைத் தொடர்ந்து, மாநில போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில், மேற்கு இம்பால் மாவட்டத்தின் இரிசெம்பா பகுதியில் அந்த வாகனம் சென்றபோது, சிலர் வழிமறித்து தீவைத்தனர். இதில், மூவரும் கருகி இறந்தனர். அவர்களுடைய உடல்களும் இதுவரை மீட்கப்படவில்லை. இந்தத் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, கூகி சமூக மக்கள் புதுடில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.