உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
கே.சம்பந்தம், புதுச்சேரி யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, 2016ல், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. கருப்பு பண ஒழிப்புக்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், தங்களிடம் இருந்த, ரூபாய் நோட்டுகளை மாற்ற, சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி, புதிதாக, 500 மற்றும், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
சமீபத்தில், 'இந்த, 2000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர், 30 வரை திரும்ப பெறப்படும். அதன்பின், இவை புழக்கத்தில் இருக்காது; அதற்குள், இந்த நோட்டுகளை வைத்திருப்போர் மாற்றிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த, 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போதே, புதிதாக, 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டிருக்க கூடாது. அப்போது அந்த தவறை செய்து விட்டு, தற்போது, 2000 ரூபாயை திரும்பப் பெறுவது சரியானதல்ல.

எந்தக் காலத்திலும், யாரும் கருப்பு பணம் வைத்திருக்கக் கூடாது என்று, ஆட்சியாளர்கள் நினைத்தால், 100 மற்றும் அதற்கு குறைவான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சிட்டு, அரசு புழக்கத்தில் விட வேண்டும் அத்துடன், இந்த முகமதிப்பில், நாணயங்களையும் தயாரித்து வெளியிடலாம். அப்போது, முறைகேடாக சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்க முடியாத நிலை உருவாகும். நேர்மையானவர்கள் தேவைக்குதக்கபடி, வங்கி கணக்குகள் வாயிலாகவே, பண பரிமாற்றத்தை மேற்கொள்வர்.
தற்போது, 2000 ரூபாய் நோட்டுகளை எந்த சிரமமும், கெடுபிடிகளும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், எதிர்க்கட்சிகளும், பணத்தை பதுக்கியவர்களும் கூக்குரலிடவில்லை; இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டவும் இல்லை. இல்லையெனில், 'அய்யோ... அம்மா...' என, கூக்குரலிட்டிருப்பர். எனவே, இனியாவது அதிக முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தவிர்ப்பதே நல்லது.