''தனியார் நிறுவனத்தை எதுக்கு தேவையில்லாம நுழைக்கிறாங்க...'' என்ற கேள்வியுடன், அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''வேளாண் விளை பொருட்களை வாங்கவும், விற்கவும், மாநிலம் முழுக்க ஏராளமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இருக்குதுங்க... இங்க, துாய்மைப் பணி, இரவுக் காவல் உள்ளிட்ட வேலையில, 1,200க்கும் அதிகமான தினக்கூலி பணியாளர்கள் இருக்காங்க...
''இவங்க சம்பளத்தை, அவங்க வங்கி கணக்குல போட்டுட்டு இருந்தாங்க... இந்த நேரத்துல, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்புல அனுமதிக்கப்பட்ட சில ஏஜன்சிகளிடம், சம்பளம் போடுற வேலையை, அரசு குடுத்துடுச்சுங்க...
''தினக்கூலி பணியாளர்கள் மாசம், 13ல இருந்து, 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்குறாங்க... இந்த பணம் முதல்ல, தனியார் ஏஜன்சியிடம் வழங்கப்படுது... அவங்க, சம்பந்தப்பட்ட பணியாளர் வங்கி கணக்குல போடுறாங்க...
''ஆனா, 10 சதவீதம் கமிஷனா பிடிச்சுட்டு மீதியைத் தான் போடுறாங்க... 'தனியார் ஏஜன்சி சம்பாதிக்க, எங்க சம்பளம் தான் கிடைச்சுதா'ன்னு தினக்கூலி பணியாளர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.