முதல்வருக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்:
தமிழகத்தின் சில பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி, பள்ளிகளுக்கு, 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. பொதுவாக எல்லா பள்ளிகளுமே, காலை, 8:30 மணியிலிருந்து, 9:00 மணிக்குள்ளாக துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிந்து விடுகின்றன. இடைப்பட்ட நேரத்தில் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதில்லை. எனவே, பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்ததை ரத்து செய்ய, முதல்வர் உத்தரவிட வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
சென்னை, அம்பத்துாரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில், ஒப்பந்த பணியாளர்களாக, 50க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம்கொடுக்கப்படவில்லை என்ற செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும், அபராதம் விதிக்கப்படுவதுடன், இதை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் பேட்டி:
'ஒடிசா ரயில் விபத்தில், ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அவர், விபத்து நடந்ததில் இருந்து அந்த இடத்திலேயே தங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தமிழகத்தில், புகாருக்கு ஆளான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிறார். கள்ளச்சாராயத்தால், 23 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று, தி.மு.க., அரசு தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடலுார் மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால், 50க்கும் அதிகமான கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த, 5 லட்சம் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன; இவற்றின் மதிப்பு, 25 கோடி ரூபாய் என, விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற கவலையில், விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். அவர்களின் கவலையை போக்கி, கண்ணீரைத் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.