வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : குஜராத் வாத்நகரில், பிரதமர் நரேந்திர மோடி படித்த பள்ளியை, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பள்ளியாக உருமாற்றி, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் மேசானா மாவட்டத்தில் உள்ள வாத்நகரை, பழமையான வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது, கடந்த 2014ல் இங்கு நடத்திய ஆய்வில், பழங்கால ராணுவ கட்டுமானங்கள், செயற்கை ஏரிகளை இணைக்கும் நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகள், கிளிஞ்சல்களால் செய்யப்படும் வளையல் தொழில் உட்பட பல்வேறு பழமையான வர்த்தக முறைகள் இங்கு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த வாத்நகரில், பிரதமர் நரேந்திர மோடி தன் இளமை பருவத்தில் படித்த பள்ளி உள்ளது. 1888ல் கட்டப்பட்ட இந்த பள்ளி, 2018 வரை செயல்பட்டு வந்தது. அதன் பின் இந்த பள்ளி மூடப்பட்டது. இதை மறுசீரமைக்கும் பணியில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. இந்த பள்ளியை மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பள்ளியாக உருமாற்றி, நாடு முழுதும் உள்ள 740 மாவட்டங்களில் இருந்தும் தலா இரண்டு மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறை இங்கு கல்வி சுற்றுலா அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.