வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோலாப்பூர்: மஹாராஷ்டிராவில் திப்பு சுல்தானுக்கு ஆதரவாக, சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியானதால் அதிருப்தி அடைந்த ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், மைசூரு மன்னர் திப்பு சுல்தானை புகழ்ந்தும், மராட்டிய மன்னர்களை இகழ்ந்தும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஹிந்து அமைப்பினர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், ஏழு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கோலாப்பூரில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஹிந்து அமைப்பினர், சத்ரபதி சிவாஜி மகராஜ் சவுக் என்ற இடத்தில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது, அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: நிலைமையை கட்டுப்படுத்த, அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இன்று மாலை வரை, இணையதள சேவையை முடக்க பரிந்துரை செய்துள்ளோம். வரும் 19ம் தேதி வரை, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.