வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, 'டிமிக்கி' கொடுத்துவிட்டு, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல், மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட்டது. 'கிங் மேக்கர்' ஆகி, ஆட்சியில் அமரலாம் என, தேவ கவுடாவும், அவருடைய மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கணக்கிட்டனர். ஆனால், 224 தொகுதிகளில், 19ல் மட்டுமே வென்று, மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தை பிடித்தது. இதையடுத்து, கட்சியின் அரசியல் எதிர்காலம் குறித்து தேவ கவுடாவும், குமார சாமியும் ஆலோசனை நடத்தினர்.
கடந்த, 2006ல், பா.ஜ.,வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைந்தன. முதல், 20 மாதங்கள் குமாரசாமியும், அதற்கடுத்த பதவிக்காலத்தை பா.ஜ.,வின் எடியூரப்பாவும் முதல்வராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க குமாரசாமி முன்வராததால் கூட்டணி அரசு கவிழந்தது.
இந்நிலையில், பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைந்து, அடுத்த லோக்சபா தேர்தலை சந்திக்க கவுடா விரும்புகிறார். கடந்த சில வாரங்களில் நடந்த சில சம்பவங்கள், இதை உறுதி செய்கின்றன. சமீபத்தில், தேவ கவுடாவின், 91வது பிறந்த நாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், அதில் தேவ கவுடா பங்கேற்றார்.

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அஸ்வினி வைஷ்ணவுக்கு ஆதரவாக தேவ கவுடா கருத்து தெரிவித்தார். இந்நிலையில், தேவ கவுடா நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து, எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அவர் 'டிமிக்கி' கொடுக்க முடிவு செய்துள்ளதை உறுதி செய்துள்ளது.
'பா.ஜ.,வுடன் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக கூட்டணி அமைக்காத கட்சிகள் எதுவும் இருக்கிறதா? மதவாத கட்சி, மதச்சார்பற்ற கட்சி என்பதற்கு சரியான விளக்கம் உள்ளதா' என, அவர் குறிப்பிட்டார்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள, 28 தொகுதிகளில், ஒன்றில் மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளம் வென்றது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதே கட்சிக்கு சிறந்ததாக இருக்கும் என, தேவ கவுடா முடிவு செய்துள்ளதாக, அவருடைய கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கூட்டணி அமைப்பது தொடர்பாக, பா.ஜ., தலைமைக்கு தேவ கவுடா துாதுவிடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.