ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி ஒன்றியம், பிச்சம்பட்டி கண்மாயில் நீர் தேங்காததால் கண்மாயை சுற்றியுள்ள நிலங்களில் விவசாயம் கேள்விக்குறியாகிறது. பல ஏக்கர் நிலங்கள் தரிசானதால் விவசாயத்தை கைவிட்டு வேலை வாய்ப்பிற்காக வெளியூர் செல்லும் அவலம் தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை, மறவபட்டி ருத்ராய பெருமாள் கோயில், போடிதாசன்பட்டி, அனுப்பப்பட்டி பகுதிகளில் இருந்து வரும் ஓடைகள் மூலம் பிச்சம்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக ஓடைகளில் நீர்வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டுள்ளன. கண்மாயில் நீர் தேங்காததால் கண்மாயை சுற்றியுள்ள பல ஏக்கர் விளைநிலங்கள் பாதித்துள்ளது.
கண்மாயில் தேங்கும் நீர் இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும். கண்மாய்க்கு நீர் கிடைக்காததால் ஆண்டிபட்டி, சக்கம்பட்டி கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கிறது.கண்மாயில் நீர்த்தேக்கும் நடவடிக்கைக்காக இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டிபட்டியில் நிலத்தடி நீர் பாதிப்பு
ஜி.எஸ்.வி.மீனாட்சிசுந்தரம், ஆண்டிபட்டி: கடந்த காலங்களில் கண்மாய் நீரால் இப்பகுதியில் மூன்று போகம் விவசாயம் நடந்தது. தற்போது ஒரு போகத்திற்கு திண்டாடும் நிலை உள்ளது. நீர் வரத்து ஓடையின் பல இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளால் கண்மாய்க்கு வரும் நீரின் அளவு குறைகிறது.
கண்மாயை சார்ந்துள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் எடுக்க விவசாயிகள் 1200 அடிக்கும் கூடுதலான ஆழத்தில் நூற்றுக்கணக்கான போர்வெல் அமைத்துள்ளனர். இருப்பினும் போதுமான அளவு நீர் கிடைக்கவில்லை.
கண்மாயில் நீர் தேங்கினால் விவசாயம் செழிப்பதுடன் உப தொழிலான கால்நடை, பட்டுப்புழு வளர்ப்பு, மூலிகை சேகரிப்பு தொழில்கள் மேம்படும். ஆண்டிபட்டி நகர் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பிச்சம்பட்டி கண்மாயை சார்ந்து உள்ளது. நகர் பகுதியில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் தேக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பு பாதிப்பு
பி.பொன்னுச்சாமி, சென்னமநாயக்கன்பட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல கிராமங்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை உள்ளது. பிச்சம்பட்டி, கோத்தலூத்து,கொத்தப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடுகள், கறவை மாடுகள் உள்ளன.
கண்மாயில் நீர் தேங்கினால் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்புக்கும் ஏதுவாகும். மழை நீரால் கண்மாய் நிரம்பும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
மூல வைகை ஆறு அல்லது குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பெரியாறு அணை உபரி நீரை ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் தேக்க விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் விவசாயத்தை காக்க இத்திட்டத்தை அரசு அவசியம் நிறைவேற்ற வேண்டும்.