கூடலுார்-கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இக் கண்மாயின் கரைப் பகுதியில் பாலிதீன் கழிவுகளுடன் கூடிய குப்பை அதிகமாக கொட்டப்படுகிறது. நகராட்சி சார்பில் அவ்வப்போது இது அகற்றப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மீண்டும் குப்பை அதிகரித்து ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தினந்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை வாங்குவதற்காக வாகனங்கள் அனைத்து தெருக்களிலும் வருகின்றன. இந்நிலையில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் கண்மாய் கரையில் குப்பை கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.