மூணாறு,--மூணாறில் மகாத்மாகாந்தி காலனியில் தனது தாயாருக்கு வழங்கிய வீட்டு மனையை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளியான மகன், மனைவியுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.
அங்கு வீடு இல்லாத ஆதிதிராவிடர்களான 216 பேருக்கு 2005ல் ஊராட்சி சார்பில் 2.5 சென்ட் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. அதனை சிலர் குறைந்த விலைக்கு விற்பனை செய்த நிலையில், சிலர் பயனாளிகளை ஏமாற்றி வீட்டுமனைகளை சொந்தமாக்கி தங்கும் விடுதி உள்பட கட்டடங்கள் கட்டியுள்ளனர்.
புகார்: மூணாறு அருகே சிவன்மலை எஸ்டேட் அப்பர் டிவிஷனில் வசிக்கும் மாற்றுதிறனாளி எபினேசர் 48, தனது தாயார் சொர்ணத்திற்கு வழங்கிய வீட்டு மனையை காங்கிரஸ் பிரமுகர் விஜயகுமார் ஏமாற்றி கையகப்படுத்தி தங்கும் விடுதி கட்டியதாகவும், வீட்டு மனையை மீட்டு தருமாறும் கலெக்டரிடம் புகார் அளித்தார். அந்த நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் வகையிலான நடவடிக்கைக்கு முன்னோடியாக விஜயகுமாரிடம் விளக்கம் கேட்டு ஊராட்சி செயலர் சகஜன் மே இறுதியில் நோட்டீஸ் வழங்கினார்.
போராட்டம்: இந்நிலையில் வீட்டு மனையை மீட்டு தரக்கோரியும், விஜயகுமார் மிரட்டுவதாக கூறியும் எபினேசர், தனது மனைவி ஈஸ்வரியுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்.
விஜயகுமார் கைவசம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி செயலர் சகஜன் தெரிவித்தார்.