தேனி-கண்ணகி கோயிலில் மாதந்தோறும் வழிபாடு செய்ய ஹிந்து அறநிலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் 9 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசுகையில், 'மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
உலக அளவில் நடக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. பி.எம்., கிஷான் திட்டத்தில் 11 கோடி விவசாயிகள் பலனடைகின்றனர்' என்றார்.
மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் பேசுகையில், 'கண்ணகி கோயிலை புனரமைக்க கோயிலை ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
இக் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை வழிபாடு செய்யவும், தமிழகத்தில் இருந்து கண்ணகி கோயிலுக்கு ரோடு வசதி அமைக்க வலியுறுத்தி உள்ளோம்.
மத்திய அரசு 2047 க்குள் நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக மாற்ற இலக்கு வைத்து செயல்படுகிறது.என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன்,ஐ.டி.பிரிவு மாநிலசெயலாளர் வசந்த்பாலாஜி, மாவட்ட செயலாளர் தங்கபொன்ராஜ், அலுவலக செயலாளர் தேவகுமார், நகரத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகி மணிகண்டன் செய்திருந்தார்.