தேனி,-தேனி மாவட்ட அரசுத்துறைகளில் 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கார், ஜீப்புகள் அடிக்கடி பழுதாவதால் ரோட்டில் பொதுமக்களும் தள்ளி சிரமம் அடைகின்றனர்.
மத்திய அரசு 15ஆண்டுகள் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மாநில அரசுத்துறைகளில் பல துறைகளில் 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வாகனங்கள் அடிக்கடி 'ஸ்டார்ட்' ஆகுவதில் பிரச்சனை ஏற்படுகின்றன.
இதனால் அரசு வாகனத்தில் பயணம் செய்ய அதிகாரிகள் தயங்குகின்றனர். பழைய வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் டிரைவர்களும் அவதியடைகின்றனர்.
நேற்று முன்தினம் தேனி புது பஸ் ஸ்டாண்டில் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான ஜீப் ஸ்டார்ட் ஆகாததால் அதனை தள்ளி தான் இயக்க வேண்டிய நிலையில், பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பயணிகள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்ய உதவினர்.
இவ்வாறு பழுதான வாகனங்களை மாற்றவும், முறையாக பராமரிக்க கோரி அரசுத்துறை வாகன ஓட்டுனர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.