தேனி -மாவட்டத்தில் 95 கண்மாயிகளில் 669 விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தில் உள்ள 98 கண்மாயிகள், பெரியாறு வைகை கோட்டத்தில் 28, ஊரக வளர்ச்சித்துறையில் 31,பேரூராட்சிகளில் 2 என 159 கண்மாயிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. மண் எடுக்க தாலுகா அலுவலகங்களில் மார்ச் 21, 24ல் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
தற்போது 95 கண்மாயிகளில் வண்டல்எடுக்க 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் வழங்கிய அடங்கல், பட்டா, சிட்டா ஆவணங்கள் வேளாண், வருவாய்துறையினரால் சரிபார்க்கப்பட்டன. கலெக்டர் ஒப்புதலுடன் 669 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மண் எடுத்து கொள்ள கனிமவளத்துறையினர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மண் எடுக்க அனுமதி சீட்டினை கண்மாய் பராமரிக்கும் பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் வழங்குகின்றனர்.
விவசாயிகளின் தேவைக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 70 யூனிட் மண் வழங்கப்படுகிறது.
மேலும் கண்மாயின் அளவு, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டும் மண் எடுக்கும் அளவு மாறுபடும்.தற்போது 26 கண்மாயிகளில் 98 பேர் மண் எடுக்க துவங்கி உள்ளனர்.
மண் எடுக்கப்படும் அளவினை அரசுத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், விவசாயத்தை தவிர்த்து வர்த்தக பயன்பாட்டிற்கு மண் பயன்படுத்துவது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.