தேனி -தேனி கக்கன்ஜி காலனியில் உள்ள ரைஸ் மில்லில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 37 மூடை அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது.
இங்குள்ள முகமது மீரான் ரபீக் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் சோளம், கம்பு தானியங்கள் அரைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.
இங்கு ரேஷன் அரிசி அரைத்து அனுப்புவதாக கலெக்டர் ஷஜீவனாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் தேனி தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் சதீஷ், பறக்கும்படை துணை தாசில்தார் முத்துக்குமார், ஆர்.ஐ., ஒச்சத்தேவன் ஆகியோர் ரைஸ்மில்லில் ஆய்வு செய்தனர்.
அங்கு அரைகுறையாக அரைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் 37 அரிசி மாவு மூடைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மூடைகளை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை ரைஸ் மில் சீல் வைக்கப்பட்டது.
சிவில் சப்ளை தாசில்தார் கூறுகையில், 'பறிமுதல் செய்த அரிசி மாவினை நுகர்பொருள் வாணிப கழக ஆய்வகத்தில் ஆய்விற்கு வழங்க உள்ளோம்.
ரேஷன் அரிசியை பயன்படுத்தி மாவு தயாரித்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வு முடிவு இங்கு ஆய்வு முடிவு கிடைக்காத பட்டசத்தில் மாதிரிகளை மஹாராஸ்டிரா, புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்புவோம். அங்கிருந்து வரும் ஆய்வு முடிவுகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.