கல்வி நிறுவன வாகனங்களின் உள்ளேயும், வெளியேயும் முன் பின் பக்கங்களில், கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தாத வாகனங்கள், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதியில்லை என்று, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் எச்சரித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பள்ளி வாகனம் விபத்தில் சிக்குவது வழக்கமாக நடக்கிறது. பள்ளி நிர்வாகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கண்காணிப்பின்மையே இதற்கு காரணம். இனி இது, தொடரக்கூடாது என்பதே, பெற்றோரின் வேண்டுகோள்.

பள்ளி வாகனங்களில் ஆய்வு
இதன்படி, பள்ளி வாகன பராமரிப்பு மேலாண்மை குறித்து, பள்ளி முதல்வர், மேற்பார்வையாளர், விளையாட்டு அலுவலர்களிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த மே 30ல், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகியோர் கொண்ட குழு, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில், பள்ளி கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வுக்குட்படுத்தியது.
கேமரா பொருத்த வேண்டும்
இதில் வாகனத்தின் முன்னும், பின்னும் உள்ள கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ்.,கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவற்றுடன், டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், புகைச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள், டிரைவர் அல்லாத உதவியாளர்கள் முதலுதவி பயிற்சி நிறைவு செய்த சான்று ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
இணை கமிஷனர் எச்சரிக்கை
'இத்தனை சோதனையும், இனி வரும் கல்வியாண்டில், எந்த பள்ளி வாகனமும் விபத்தில் சிக்கக்கூடாது; ஒரு குழந்தை கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக' கூறுகிறார், கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவகுமரன்.
அவர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி, கல்வி நிறுவன வாகனங்களின் முன், பின் பக்கங்களில் நான்கு கேமராக்கள் பொருத்த வேண்டும். அவை டிரைவர் இருக்கையின் அருகே உள்ள, எல்.சி.டி. திரையில் தெரியும் வகையில், வசதி செய்யப்பட வேண்டும்.
அப்படி பொருத்தாத வாகனங்களுக்கு, பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதியில்லை. இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீத வாகனங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொருத்தாத வாகனங்கள், பள்ளிகள் திறக்கும் முன் பொருத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கட்டாயப்படுத்தக் கூடாது!
மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கூறுகையில், ''பள்ளி வாகன டிவைர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் தான் இறக்கி விட வேண்டும். பள்ளிகளில் கண்டிப்பாக, ஒன்று உள்ளே செல்வதற்கும், மற்றொன்று வெளியே வருவதற்கும் என இரு வழிகள் இருக்க வேண்டும்.வாகனம் பள்ளி வளாகத்தில் வந்தவுடன், மாணவர்கள் அனைவரும் இறங்கி வகுப்பிற்கு சென்றார்களா, மாலை பள்ளி முடிந்து அந்தந்த வாகனங்களில் ஏறினார்களா என்பதை, உடற்கல்வி ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை சரியான நேரத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகள் இருந்தால், கண்டிப்பாக ஒரு பெண் ஊழியர் இருக்க வேண்டும்,'' என்றார்.
பெண் பாதுகாவலர்
முதன்மை கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் நிலை, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பெண் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில், கட்டாயம் ஒரு பெண் பாதுகாவலர் உடனிருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வாரத்திற்கு ஒரு பாடவேளை, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மாணவர்களுக்கு விளக்கப்படும். விபத்தில்லா பள்ளி பயணத்தை உறுதி செய்ய, ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் குழு -