சாணார்பட்டி--சாணார்பட்டியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் போதுமான போலீசார் நிரப்பப்படாமலும், கணினி இருந்தும் வழக்குப்பதிவு செய்ய வசதி இல்லாமல் பெயரளவுக்கு செயல்படுவதால் வேலை பளுவால் போலீசாரும் சிரமப்படுவதுடன், புகார் கொடுக்க வரும் பெண்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
நத்தம் அருகே சாணார்பட்டியில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் திறப்பதற்கு முன் நத்தம், சாணார்பட்டி,செந்துறை உள்ளிட்ட கிராம மக்கள் 70 கி.மீ., கடந்து வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வந்தனர்.
மகளிர் ஸ்டேஷன் இல்லாததால் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிக அளவில் நிகழ்ந்து வந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி ெவளியானது.இதையடுத்து சாணார்பட்டியில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் 2022 ஜூன் 16ல் முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஸ்டேஷனில்தான், நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல் தாலுகா, சின்னாளபட்டி, அம்பாதுரை, தாடிக்கொம்பு உள்ளிட்ட 6 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மக்கள் புகார் அளிக்க வேண்டும். இதனால் இங்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. புகார்களை விசாரிக்க போதுமான போலீசார் இங்கே நியமிக்கப்படவில்லை.
திண்டுக்கல் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் 40 பெண் போலீசார்கள் பணியாற்றும் நிலையில், சாணார்பட்டியில் தலா ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., 3 எஸ்.எஸ்.ஐ., 4 முதன்மைக் காவலர்கள் என 11 போலீசார் மட்டுமே உள்ளனர். ஏற்கனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள நிலையில் இவர்களில் சிலர்,சில நேரம் வேறு பகுதி பாதுகாப்பு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் புகார்களை விசாரிக்க காலதாமதம் ஆகும் நிலையில், புகார் அளிக்க வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் ஸ்டேஷன் திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்வதற்காக கணினி வைக்கப்பட்டும் சி.சி.டி.என்.எஸ்., எனும் வழக்குப்பதிவு இணைப்பு தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் குற்றம் நடக்கும் பகுதி ஸ்டேஷன்களுக்கு சென்று வழக்கு பதிய வேண்டிய நிலை உள்ளதால் பெண் போலீசார் தேவையின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பெயரளவில் செயல்படும் சாணார்பட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு தேவையான போலீசாரை நியமித்து ஸ்டேஷனிலேயே வழக்கு பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவது அவசியமாகிறது. அப்போதுதான் இப்பகுதியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.
நடவடிக்கை எடுங்க
ஆர்.ராமராசு, அ.தி.மு.க., சாணார்பட்டி ஒன்றிய செயலாளர், ராமராஜபுரம்: நத்தம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது அனைத்து மகளிர் ஸ்டேஷன். சாணார்பட்டியில் திறக்கப்பட்டும் வழக்குப்பதிவு செய்யும் வசதி, போதுமான போலீசார் நியமிக்கப்படாததால் பெயர் அளவுக்கு மட்டுமே செயல்படுகிறது
இதனால் புகார் அளிக்க வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து ஸ்டேஷனை முழுமையாக செயல்படுத்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு
ஏ.ஜி.டி.அந்தோணி, அ.தி.மு.க., மாவட்ட சிறுபான்மை நல பிரிவு இணைச் செயலாளர், கொசவபட்டி: சாணார்பட்டி மகளிர் ஸ்டேஷன் திறக்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெற போகிறது. இதனால் தற்போது இப் பகுதி பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளது.
ஆனால் ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீசாரும் சில நேரங்களில் வேறு பாதுகாப்பு பணிகளுக்காக மாற்றப்படுகின்றனர். இதனால் புகார் அளிக்க வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வழக்கு பதிய மற்ற ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் புகார் அளிக்க வரும் பலர் வெகு துாரம் கடந்து வடமதுரை ஸ்லேடஷன் சென்று வருகின்றனர்.
இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க மீண்டும் வாய்ப்பு உள்ளது.
அலைக்கழிக்கப்படுகின்றனர்
பி.சத்யா பொன்னழகன், சமூக ஆர்வலர், புதுார், நத்தம்: 6 ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்கள் சாணார்பட்டி ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வருவதால் இங்கு தேவையான போலீசார் நியமிக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பெண் போலீசார் உள்ளதால் அவர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது. மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஸ்டேஷன்களில் போலீசார் பணியில் உள்ளனர்.
இதனால் பிற மாவட்டங்களில் வேலை பார்க்கும் போலீசார் தங்களது சொந்த மாவட்டங்களில் பணிபுரிய கோரிக்கை வைத்தும் அதை நிறைவேற்றப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் பெண் போலீசார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.