வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சதி செயல்களை தடுக்க, ரயில் பாதைகளின் அருகே, 'சிசிடிவி கேமரா' பொருத்த, ரயில்வே பாதுகாப்பு படை திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 725 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில், பயணியரின் வருகை அதிகரித்து வருகிறது. பயணியர் போர்வையில் வரும் சில ஆசாமிகள், திருட்டு, கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையே, சமீப காலமாக ரயில்கள் மீது கல் வீச்சு, ரயில் பாதையில் கற்கள், 'டயர்' வைப்பது போன்ற செயல்களுடன், சிக்னலை உடைக்கும் சதி வேலைகளும் நடக்கின்றன. அதனால், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, முக்கிய வழித்தடங்களில், ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வு செய்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையில், நாங்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமீப காலமாக, ரயில் பாதைகளில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலரை பிடித்துள்ளோம்; பெரும்பாலானோர், போதை ஆசாமிகளாக உள்ளனர். இதற்கிடையே, முக்கியமான, 50 இடங்களை தேர்வு செய்து, அங்கெல்லாம் கூடுதல் போலீசாரை பணியமர்த்தவும், ரயில் பாதைகள் அருகே, 'சிசிடிவி கேமரா' பொருத்தவும் முடிவு செய்துள்ளோம். இடத்திற்கு ஏற்றார் போல, 10 கேமராக்கள் வரை பொருத்தி கண்காணிக்க உள்ளோம்.
சென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, காட்பாடி, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் கேரளா மாநிலத்தில் திரூர், சொர்னுார் உள்ளிட்ட, 50 இடங்களில் பாதுகாப்பு பணிகளை அதிகப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.