சென்னை: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் 'டெண்டர்' ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அளித்த புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை மாநகராட்சியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கவும் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு மேற்கொள்ளவும் 37 'டெண்டர்'கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த டெண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் 2020ல் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் 2020 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது ஆரம்பகட்ட விசாரணை நடப்பதாகவும் இரண்டு மாதம் அவகாசம் அளிக்கும்படியும் கோரப்பட்டது.
இதையடுத்து 'விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நிலுவையில் இருந்த இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ''இந்தப் புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணையும் முடிந்து விட்டது.
ஆரம்பகட்ட விசாரணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை'' என்றார்.
இதையடுத்து 'ஆரம்பகட்ட விசாரணை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் இருந்து அரசை தடுக்க முடியாது; எனவே விசாரணை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.