வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்; அனைவருக்கும் இணையதள சேவை கிடைக்கும் நோக்கத்தில், குறைந்த விலையில், 'பிராட்பேண்ட்' இணையதள சேவையை கேரள அரசு துவங்கியுள்ளது.
இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையதள சேவை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக, 'பிராட்பேண்ட்' இணைய தள சேவையை மாநில அரசு நேற்று முன்தினம் துவங்கியது.
'கேபான்' எனப்படும், 'கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
![]()
|
கேரளாவை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்கும், புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் முக்கியப் படியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இடமாலக்குடி போன்ற அடர்ந்த வனப்பகுதியிலும், 'பிராட்பேண்ட்' இணையதள சேவை அனைவருக்கும் கிடைக்க இத்திட்டம் வழி செய்கிறது.
தனியார் பெரு நிறுவனங்கள் அளிக்கும் தொலைதொடர்பு சேவைக்கு மாற்றாகவும், அவர்களின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவித்து, அனைவருக்கும் இணையதள சேவை கிடைக்கவுமே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த இணையதள சேவை மற்றவர்களுக்கு குறைந்த விலையில் அளிக்கப்பட உள்ளது.
இந்த, 'பிராட்பேண்ட்' திட்டத்தில், குறைந்தபட்சமாக மாதம் 299 ரூபாய்க்கு 20 எம்பிபிஎஸ் வேகத்தில், 3,000 ஜி.பி., வரை இலவசமாக 'டவுண்லோட்' செய்து கொள்ளலாம்.
அதிகபட்சமாக, மாதம் 1,249 ரூபாய்க்கு, 250 எம்பிபிஎஸ்., வேகத்தில், 5,000 ஜி.பி., வரை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
இதற்காக, கேரளா முழுதும் 1,500 கோடி ரூபாய் செலவில், 35,000 கி.மீ., துாரத்திற்கு, 'பைபர் ஆப்டிக் கேபிள்' வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 30,000 அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.