சென்னை: சென்னை மேம்பால ரயில் நிலையமான பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க, 'சர்வே' பணி விரைவில் துவங்க உள்ளது.
சென்னையில் இருந்து கடலோரம் வழியாக ரயில் பாதை அமைத்தால், புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும்; பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என ரயில்வே கருதுகிறது.
அதன்படி, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்துக்கு புதிய பாதை அமைக்க, 2007ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது.

ரூ.1,500 கோடி
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், இந்த திட்டப் பணியின் மதிப்பீடு, 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, சென்னை மேம்பால ரயில் பாதை ரயில் நிலையம் உள்ள பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு புதிய ரயில் பாதை அமைக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை பெருங்குடியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே, இந்த ரயில் பாதை அமையும். இதேபோல், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு இணைப்பு ரயில் பாதை அமைக்கப்படும்.
பயணியர் ரயில்கள் பெருங்குடி வழியாகவும், சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும். பெருங்குடி அருகே மற்றொரு ரயில் நிலையமும் அமைக்கப்படும்.
ஆய்வு அறிக்கை
இந்த திட்டத்திற்கான, முதல் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது.
மூன்று மாதங்களில் ஆய்வு முடிந்து, ரயில்வேயிடம் அறிக்கை சமர்பிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த, 1,500 கோடி ரூபாய் செலவாகும்.
திட்டத்திற்கான வழித்தட அமைப்பு, தேவையான இடங்கள், ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் ஆய்வு அறிக்கையில் இடம்பெறும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின், படிப்படியாக திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.