வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஈடுபட்டார். இது குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று(ஜூன் 08) உலக பெருங்கடல் தினம் ஆகும்.
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஈடுபட்டார். இதையடுத்து, அவர் கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
கடற்கரைகளை சுத்தம் செய்ய மட்டுமின்றி, இந்த உலக பெருங்கடல் தினத்தில், நமது கடற்கரைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இங்கு அனைவரும் கூடியுள்ளோம் எனக் கூறினார்.
இது குறித்து, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை:
உலகப் பெருங்கடல் தினத்தில், பெருங்கடலால் சூழப்பட்ட இந்தியாவின் தனித்துவமான நிலையைக் கொண்டாடுவோம். நமது கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்போம். உயரும் கடல் மட்டம், வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, நமது பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கும், புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் உறுதி கொள்வோம். கடல் வளங்களின் பங்கு, இந்தியாவிற்கும் முழு உலகிற்கும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு முக்கியமாகும் எனக் கூறியுள்ளார்.