வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் வகையில், புகைப்படங்களுடன் கனடாவில் தெருக்களில் ஊர்வலமாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு, காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் மிலின் தியோரா, மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு பேரணிகள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த ஜூன் 4ம் தேதி காலிஸ்தானி ஆதரவாளர்களால் கனடாவின் பிராம்டன் என்ற நகரில் ஒரு அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பின் ஒரு பகுதியாக சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இது குறித்து வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு, காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் மிலின் தியோரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் இந்திராவின் படுகொலையை சித்தரித்து, கனடாவின் பிராம்டன் நகரில் நடைபெற்ற 5 கி.மீ நீள அணிவகுப்பை ஒரு இந்தியனாக நான் எதிர்க்கிறேன். இது ஒரு நாட்டின் வரலாற்றின் மீதான மரியாதையை கேள்வி குறியாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:
இதில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த பேரணி எதற்கு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. இது உறவுகளுக்கு நல்லதல்ல, கனடாவுக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.