வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது மக்கள் நலன் கருதி விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்து வந்தன. ஆனால், கடந்த 383 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் நிகழ்ந்தாலும், பெட்ரோல், டீசல் விலை ஏறவோ, இறங்கவோ செய்யவில்லை.

இந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்தாலும், விலையை குறைக்காததால் கடந்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நல்ல லாபம் அடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராக விற்பனை ஆகிறது. இதனால் எரிபொருள் விலையை குறைக்க கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் எரிபொருள் விலைகளை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விரைவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் காஸ் சிலிண்டர் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.